கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

வண்டும் தட்டானும்    புற்களால் சூழப்பட்ட பசுமையான நிலப்பரப்பில் வண்டு ஒன்று அதன் வலையை அமைத்திருந்தது. அவ்வண்டு குடும்பத்தில் கணவன...

ஒரு பக்க கதை - வண்டும் தட்டானும்

வண்டும் தட்டானும் 


  Narkanavu Tamil

புற்களால் சூழப்பட்ட பசுமையான நிலப்பரப்பில் வண்டு ஒன்று அதன் வலையை அமைத்திருந்தது. அவ்வண்டு குடும்பத்தில் கணவன், மனைவி  மற்றும் இரு குழந்தைகள் என இருந்தது. ஆண் வண்டு தன் குடும்பத்தின் மீது அக்கறையோடும் பாசத்தோடும் இருந்து வந்தது. தினமும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர வசதிகளை செய்து கொடுத்தது. வண்டின் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு தட்டானை கவர்ந்தது. ஆதலால் அதனிடம் நட்பு பாராட்டியது.


விரைவிலேயே அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். அதனால் எல்லா விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். சில மாதங்களுக்கு பிறகு வண்டின் நடவடிக்கையில் சில மாற்றங்களை கவனித்தது தட்டான். அது தான் சேகரித்த உணவை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் வேறொரு இடத்தில் சேமித்து வைத்து கொண்டிருந்தது. அதை பற்றி வண்டிடம் கேட்டதற்கு பதில் கூறாமல் மவுனம் சாதித்தது. பிறகு தட்டான் கொஞ்சம் கண்டிப்புடன் கேட்கவே பின் வருமாறு கூறியது.

அமைதியாக இருந்த அந்த நிலப்பரப்பில் எங்கிருந்தோ வந்த ஓணான் ஒன்று அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. அங்கு இருந்த மற்ற சிறு சிறு உயிர்களின் வீட்டை நாசம் செய்தது. அதனிடம் எல்லோரும் பயம் கொண்டனர். நானும் என்னுடைய வீட்டை எதாவது செய்து விடுமோ என பயந்தேன். ஆதலால் அது என் வீட்டை நெருங்கிய போது அதனிடம் எங்களை விட்டு விடும் படி கெஞ்சினேன். அதற்கு அந்த ஓணான் தனக்கு தினமும் உணவளித்தால் விட்டுவிடுவதாகவும் இல்லையேல் உன் வீட்டை நாசம் செய்து விடுவேன் என மிரட்டியது. ஆகவே தான் அதற்கும் சேர்த்து உணவு சேமித்து வருகிறேன்.

இதனை கேட்ட தட்டான் நண்பனின் நிலை கண்டு வருந்தியது. பின்பு ஒரு முடிவுக்கு வந்தவனாக, நாம் தனியாக அதனை எதிர்த்து போராட முடியாது அனால் அதற்கு நல்ல பாடம் ஒன்றை புகட்டலாம் என கூறி தன் திட்டத்தை எடுத்துரைத்தது. அதன்படி  அடுத்த நாள் ஓணான் உணவருந்த வந்த வேளையில் தட்டான் அதை சீண்டி அதற்கு கோபத்தை வரவழைத்தது. கோபம் கொண்ட ஓணான் தட்டானை பிடிக்க துரத்தியது. அது தன்னை தூரத்தி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தட்டான் அதற்கு சற்று போக்கு காட்டி பறந்தது.

இப்படியே கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு இடத்தில மறைந்து கொண்டது. அது மறைந்து இருந்த இடத்திற்கு வந்த ஓணான் நீ இங்கு இருப்பது எனக்கு தெரியும் உன்னை என்ன செய்கிறேன் பார் என ஆவேசமாக கத்தியது. பின்னர் தான் , தட்டானை பிடிக்க வந்து தானே சிக்கலில் மாட்டி கொண்டது அதற்கு தெரிய வந்தது.

அது நின்ற இடம் ஒரு எறும்பு புற்று அதில் ஆயிரக்கணக்கில் எறும்புகள் இருந்தன. தங்கள் புற்றுக்குள் அத்துமீறி நுழைந்த ஓணானை நாலாபுறமும் கடிக்க ஆரம்பித்தன. ஓணான் சுதாரித்துக் கொண்டு ஓட எத்தணிப்பதற்குள் அவை அதிகமாக கடிக்க தொடங்கியிருந்தன. அங்கும் இங்கும் ஓடிய ஓணான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடியது. அடுத்தவர் உழைப்பில் வாழ நினைத்தால் இப்படியான நிலைமை தான் ஏற்படும் என்பதை உணர்ந்த ஓணான் மறுபடியும் அந்த பக்கம் கால் வைக்கவில்லை. தட்டான் தன் சமயோஜித புத்தியால் வண்டுக்கு வந்த பிரச்சினையை தீர்த்து வைத்தது வண்டும் அதை பாராட்டியது. ஒரு வழியாக பிரச்சினை தீர்ந்தது என தட்டானும் வண்டும் மகிழ்ந்தனர். 

- வாழ்த்துக்களுடன் 
ஜெகன்









0 Comments: