ஒற்றுமையே வலிமை
தமிழ் தனது பெற்றோருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவனது கிராமம் ஒரு மலை பிரதேச கிராமம் ஆதலால் தினந்தோறும் உணவைத் தேடி எடுத்து வர வேண்டும் இதுவே அவனது தினசரி கடமை ஆகும். ஒவ்வொரு நாளும் சேகரித்த உணவில் பாதியை அந்த பகுதியை தன் கைப்பிடியில் வைத்திருக்கும் அரக்கர்களுக்கு வாரியாக செலுத்தி விடுவர் அவனது பெற்றோர் இது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகும். ஏனெனில் சில அரக்கர்கள் அவர்களது கிராமத்தை ஆக்ரமித்து இருந்தனர் மேலும் அவர்கள் உருவத்திலும் வலிமையிலும் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். ஆதலால் யாரும் அவர்களை எதிர்க்க துணியவில்லை. சில நேரம் தமிழ் இதை பற்றி யோசிப்பான் பிறகு மனதை தேற்றி கொள்வான்.
ஓரு நாள் உணவு தேடும் போது தவறி ஒரு குழியில் விழுந்து விட்டான் அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஒருவன் அவனை காப்பாற்றினான். அவன் பெயர் அன்பு, அருகில் இருந்த கிராமத்தில் வசித்து வந்தான். தக்கசமயத்தில் தமிழுக்கு உதவி செய்து அவன் உயிரை காப்பாற்றினான் அன்றிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். ஒரு நாள் தமிழ் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அன்பிற்கு அழைப்பு விடுத்தான். ஆகவே நண்பன் வீட்டிற்கு சென்றான் அன்பு. அங்கு தமிழும் அவனது பெற்றோரும் அவனை அன்புடன் வரவேற்றனர்.
சிறிது நேரம் வீட்டில் உரையாடிவிட்டு நண்பர்கள் இருவரும் ஊரை சுற்றி பார்க்க சென்றனர். இருவரும் ஊரை சுற்றி பார்த்து கொண்டும் அவர்களுக்குள் விளையாடிக் கொண்டும் சந்தோசமாக நேரத்தை களித்தனர். பிறகு வீட்டிற்குத் திரும்பினர். இரவு உணவை முடித்த பிறகு அன்பு தமிழிடம் அரக்கர்களை பற்றி விசாரித்தான். அரக்கர்கள் இந்த கிராமத்தை ஆள்பவர்கள் என்றும் அதனால் தங்களை அடிமைகளை போல் நடத்துகிறார்கள் என்றும் அவர்களை எதிர்ப்பவர்களை ஈவு இரக்கமின்றி கொன்று விடுவார்கள் என்றும் தன் ஆதங்கத்தை கொட்டினான்.
இந்த விஷயங்களை கேட்டு அறிந்து கொண்ட அன்பு தமிழிடம் சில கேள்விகளை முன் வைத்தான். அரக்கர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என கேட்டான். ஒரு 100 லிருந்து 150 அரக்கர்கள் இருப்பார்கள் என்றான். உங்கள் கிராமத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என வினவினான். தனது கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள் என்றான். 1000 நபர்களை கொண்ட நீங்கள் வெறும் 100க்கும் மேற்பட்டவர்களோடு மோதி ஏன் வெல்ல முடியாது? என கேட்டான். இந்த தமிழின் சிந்தனையை தூண்டி விட்டது. நண்பர்கள் இருவரும் இணைந்து ஒரு படையை திரட்டினர் மேலும் அன்பிற்கு போர்க் கலையும் தெரியும் என்பதால் அவன் மூலம் ரகசிய பயிற்சி மற்றும் படையை உருவாக்கினர். அவர்கள் மூலம் கிராமம் முழுவதும் விழிப்பூணர்வை ஏற்படுத்தினர். முதலில் பயந்த மக்கள் பின்பு தமிழ் மற்றும் அன்பின் தைரியம் மிக்க பேச்சினால் நம்பிக்கை பெற்றனர்.
முதல் விஷயமாக அன்பு எதிரிகளின் ராணுவ ரகசியங்களை ஒற்றர்கள் மூலமாக தெரிந்து கொண்டான். சில நாட்களுக்கு பிறகு மக்கள் அனைவரையும் ரகசிய படையின் உதவியுடன் ஒன்றிணைத்து அரக்கர்களுக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்தனர் . இந்த திடிர் தாக்குதலை எதிர்பார்க்காத அரக்கர்கள் நிலை குலைந்தனர். 100 பேர் கொண்ட அரக்கர்களால் 1000 பேர் கொண்ட மக்களையும் ரகசிய படையையும் சமாளிக்க முடியாமல் சரணடைந்தனர். பின்பு அரக்கர்கள் அனைவரும் அக்கிராமத்திலிருந்து வெளியேறினார். இப்போது தான் அந்த கிராமத்து மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்தனர். மக்கள் அனைவரும் தமிழ் மற்றும் அன்பின் வீரத்தையும், புத்திசாலித்தனத்தையும் வெகுவாக பாராட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒற்றுமையே வலிமை என்பதை புரிந்து கொண்டனர்.
இன்னும் நிறைய கதைகள் படிக்க
இன்னும் நிறைய கதைகள் படிக்க
0 Comments: