பயிற்சியே மனிதனை உயர்த்தும்
கனிமொழி ஒரு பனிரெண்டாம் வகுப்பு மாணவி. அவள் தன் ஊரில் உள்ள மேல்நிலை பள்ளியில் படித்து வந்தாள். அவள் ஒரு சிறந்த மாணவி. அவளது குடும்பம் நடுத்தர வர்க்கம் என்பதால் நேரம்,பணம் மற்றும் மனிதர்களை பற்றியும் அறிந்து வைத்திருந்தாள்.ஆதலால் அனைவரிடமும் அன்புடனும் பணிவுடனும் நடந்து கொண்டாள். தற்போது வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தாலும் முன் வகுப்புகளில் குறிப்பாக 9ம் வகுப்பில் சராசரி மாணவியாகவே இருந்தாள் மேலும் அரையாண்டுத் தேர்வுக்கு முந்தைய தேர்வுகளில் கணித பாடத்தில் தேர்ச்சி அடையாததால் தர வரிசை பட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக தனது படிப்பு விஷயத்தில் சில கண்டிப்பான நடைமுறைகளை பின்பற்ற உறுதி மேற்கொண்டாள். கணித பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினாள். முதலில் தேர்ச்சி பெற தேவையான 10 மதிப்பெண்கள் மற்றும் சிறு வினாக்களை முறையாக பயிற்சி செய்ய தொடங்கினாள் அதோடு மட்டும் இல்லாமல் தேர்வுக்கு முந்தைய நாள் தான் கற்ற அனைத்தையும் மீண்டும் மீண்டும் எழுதி பார்த்தாள். இதன் மூலம் எந்த கேள்விக்கும் பதில் எழுதுமளவிற்கு தேர்ந்தாள்.
அவளது பயிற்சி மற்றும் விடா முயற்சியின் காரணமாக 9ம் வகுப்பில் நன்றாக தேர்ச்சி அடைந்ததோடு மட்டுமில்லாமல் 10ம் வகுப்பிலும் பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ந்தாள். இவ்வாறான கடின பயிற்சியின் காரணமாக இப்பொழுதும் வகுப்பில் முதல் மாணவியாக இருந்து வருகிறாள். இந்த நிலையில் அவளுடைய வகுப்பில் துர்கா எனும் மாணவி படித்து வந்தாள். அவள் எப்போதும் வீட்டுப்பாடம் செய்யாமல் வருவது, ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவது, எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாதது என இருந்து வந்தாள் மேலும் அவளால் படிப்பிலும் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனை கவனித்து வந்த கனிமொழி அவள் மீது இரக்கம் கொண்டு அவளுக்கு உதவ எண்ணினாள்.
பள்ளி முடிந்ததும் கனிமொழி துர்காவை சந்தித்து பேசினாள். சிறிது நாட்களாகவே உன்னை கவனித்து வருகிறேன். உனக்கு என்ன பிரச்சினை ஏன் உன்னால் சரிவர படிக்க முடியவில்லை என வினவினாள். அதற்கு துர்கா, நான் என்னதான் படித்தாலும் சீக்கிரமாகவே எனக்கு மறந்து விடுகிறது என்றாள் சோகமாக. இதனை கேட்ட கனிமொழி அவளிடம் சொன்னாள், இது பெரிய பிரச்னையே இல்லை. இதற்கான தீர்வை நான் உனக்கு சொல்கிறேன். அதன்படி பயிற்சி செய் முன்னேற்றம் காண்பாய் என்று அவளுக்கு தைரியம் கொடுத்தாள்.
அதாவது எந்த பாடத்தை படித்தாலும் உடனடியாக அதை எழுதி பார்த்து விடு, எப்போது நீ படித்த பாடம் உன் மனதில் நிலையாக நிற்கிறதோ அது வரையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும் என்று கூறினாள். துர்காவுக்கு கனிமொழி கூறிய தீர்வானது சரி என்று பட்டது மேலும் வலிய வந்து தனக்கு உதவ முன் வந்த அவள் குணம் துர்காவுக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால் துர்காவும் கடுமையாக பயிற்சி செய்ய துவங்கினாள்.
அந்த பயிற்சியின் வெளிப்பாடு அவள் மதிப்பெண்களில் தெரிந்தது. விரைவிலேயே நன்றாக படிக்கும் மாணவிகளின் பட்டியலில் இணைந்தாள். அதோடு மட்டுமில்லாமல் ஆசிரியர்களிடமும் நற்பெயர் எடுக்கத் துவங்கினாள். இந்த மாற்றத்துக்கு காரணமான கனிமொழிக்கு அவள் உளமார நன்றி கூறினாள். பதிலுக்கு கனிமொழி இதில் என் பங்கு பெரிதாய் ஒன்றும் இல்லை நீ செய்த பயிற்சியே உன்னை உயர்த்தியது என்று பணிவுடன் கூறினாள்.
இன்னும் நிறைய கதைகள் படிக்க
இன்னும் நிறைய கதைகள் படிக்க
0 Comments: